ஓவியர் புகழேந்தியின் 'போர் முகங்கள்" கண்காட்சி நாளை துவக்கம்!
தமிழீழ மக்கள் மீதான சிங்கள இந்திய அரசுகளின் இனவெறிப் போர் முடிந்த ஓராண்டை நினைவுகூறும் வகையில், அந்த போரின் கொடூரங்களை சித்தரிக்கும் ஓவியங்களை ஓவியர் புகழேந்தி அவர்கள், 'போர் முகங்கள்' என்ற தலைப்பிலான கண்காட்சியாக நாளை(11.05.2010) முதல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கிறார்.
சென்னை தியாகராயர் நகரிலுள்ள செ.தெ.நாயகம் மேனிலைப் பள்ளியில் 11ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இந்த ஓவியக் கண்காட்சி துவங்குகிறது. துவக்க விழாவிற்கு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமை வகிக்கிறார்.
திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திரா ஓவியக் கண்காட்சியைத் துவக்கி வைக்கிறார். திரைப்பட இயக்குனர்கள் மணிவண்ணன், இயக்குநர் சீமான், கவிஞர் இன்குலாப், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தோழர் தியாகு, இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், மருத்துவர் தெய்வநாயகம் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். நிறைவில், ஒவியர் புகழேந்தி ஏற்புரையாற்றுகிறார்.
இக்கண்காட்சி நாளை தொடங்கி மே 16 அன்று வரை நடத்தப்படுகின்றது.
